நினைவுகள்

 

ஏக்கம். தனக்கு சொந்தமானது என்று எண்ணும் ஒரு பொருளோ, அல்லது தனக்கென்று எப்பொழுதும் உரிமையாகும் என்று நினைக்கும் ஒரு விஷயமோ, தன் கை நழுவி காலத்தின் பிடியில் சிக்கும்போது, அந்த இழப்பால் ஏற்படும் உணர்வே ஏக்கம். பதினாறு வயதிலே ஏற்படும் காதலும், இளமை பருவத்தின் ஏக்கமாகும்.

 

இரவு நேரம். சுமார் பன்னிரண்டு மணிக்கு தூக்கம் வராமல் கட்டிலில் உருண்டு பிரண்டு கொண்டிருந்தான், பரத். பகலிலோ, நாளின் மற்ற நேரங்களிலோ வராத பற்பல சிந்தனைகளும் குழப்பங்களும், அந்த இரவு நேரத்தில் அணை உடைத்து வரும் வெள்ளம் போல் அவன் மனதில் ஓடின. அந்தச் சிந்தனைகளுக்கு பின்னால் மறைந்திருப்பவள்… ஷாமளா. அவளே பரத்தின் நெஞ்சை கொள்ளைக் கொண்ட காதல் தேவதை. அனைத்து கவிஞர்களும் பெண்ணை வர்ணிக்கும் கவிதை வரிகளால் அவனும் மென்மையான ஷாமளாவை தனது கற்பனைகளில் வர்ணித்துக் கொண்டிருந்தான். உறக்கம் வரும்பொழுது கனவில் அவள் தோன்றவேண்டும் என்று தினசரி பிரார்த்தனை செய்துகொண்டிருந்தான், அந்தப் பித்தன்.

 

மறுநாள் காலை ஏழு மணிக்கு பள்ளிக்குச் செல்ல வேண்டும். ஆனால் இரவு இரண்டு மணி ஆகியும் தூங்காமல், ஷாமளா பற்றிய எண்ணங்கள் நிறைந்த படுக்கையில் அவதியுற்றான் பரத். இதில் நகைச்சுவை என்னவென்றால், அவன் ஷாமளாவிடம் பேசியதுக் கூட இல்லை. அவளுக்கு அவனைப் பற்றி தெரியுமா என்பதுக் கூட சந்தேகம் தான். வண்ண மயிலிடம் நெருங்காமல், தூரத்திலிருந்து ரசிப்பது போல், தன் கைக்கு எட்டாத பெண் பூவை ரசித்தான். அப்பூவைச் சுற்றி முட்கள் இருக்குமோ என்பதை அவன் ஒரு கணமும் யோசிக்கவில்லை.

 

அரை குறை தூக்கத்தோடு, மறுநாள் காலை பள்ளிக்குச் சென்றான். இன்று தன் காதலை அவளிடம் கூறவேண்டும் என்ற உறுதியுடன் இருந்தான். தன் நண்பன் சோமுவிடம் தன் காதலை வெளிப்படுத்துவதற்க்கு வழி வேண்டி அறிவுரை கேட்டான். “டேய், ஃபேஸ்பூக் வாட்சப் இப்படி ஏதாவது ஒரு வழியா அவளை மடக்குடா! விவரம் தெரியாத பையனா இருக்கியே?” என்றான் உயிர் நண்பன். அவ்வாறு செய்தால், அது காதலுக்கே அவமானம் என்று எண்ணிய பரத், உண்மையான தன் காதலை ஒரு கடிதத்தில் தெளிவாக எழுதி வைத்துக்கொண்டு நேராக ஷாமளாவிடம் சென்றான்.

 

அக்கடிதத்தில் என்ன விசேஷம் என்றால், முன்பக்கத்தில் கவிதை நடையில் தன் காதலை விளக்கி விட்டு, பின்பக்கத்தில் ஷாமளாவின் முகத்தை ஓவியமாக தீட்டியிருந்தான். கனவு காணும் திறனோடு, ஓவியம் வரையும் திறனும் அவனுள் நன்றாகவே குடிக்கொண்டது!

 

அப்பொழுது மதியம் பன்னிரண்டு மணி அளவில் மதிய உணவு உண்ண அனைத்து மாணவர்களும் புறப்பட்டனர். உலகமே இரண்டாக பிளந்தாலும் சரி, தன் காதல் கடிதத்தை எப்படியாவது ஷாமளாவிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் இருந்த பரத், சற்று நடுக்கத்துடனே அவளை நெருங்கினான். வாய் திறந்து “ஷாமளா” என்று அழைப்பதற்குள்…

 

“டேய் பரத், இங்கே வாடா!” என்று உணவுக் கடையிலிருந்து அன்போடு கூச்சல் போட்டான், அவனின் பிரிய சிநேகிதன் சோமு. சற்று முன் கம்பீரமாக நின்ற தைரியம் மனதின் ஆழத்தில் பயத்தில் மறைந்துக்கொள்ள, பரத் தன் ஆசை நாயகியை விலகி, தன் இம்சை நண்பனிடம் போய் சேர்ந்தான். “என்னடா நீ! இப்படி நந்தி மாதிரி வந்து காரியத்தை கெடுத்துட்டியே!” என்று புலம்பி தீர்த்தான்.

 

“இல்லை… இன்னக்கு என்ன தேதி?”

 

“இன்னைக்கு பெப்ரவரி பதிமூணு. ஏன்டா கேட்க்குரே?”

 

“அப்படினா, நாளைக்கு என்ன நாள்னு தெரியுமா?”

 

“ஓ…”

 

பரத் உடனே புரிந்துகொண்டான். தன் காதலைச் சொல்ல மறு தினமே சரி என்று தீர்மானித்து, தனக்கு வழி காட்டிய நண்பனுக்கு மனதார நன்றி கூறினான்.

 

அன்றிரவு, வழக்கம் போல் தூக்கமின்றி, ஆந்தைப்போல் கண்விழித்து கனவு கண்டான். மறுநாள் காலை ஆறரை மணிக்கே பள்ளிக்குச் சென்றான். எப்படியாவது ஷாமளாவை சந்தித்து, கடிதத்துடன் தன் உள்ளத்தையும் சேர்த்து கொடுக்க வேண்டும் என்று வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தான். ஆனால் அவள் வரவில்லை. அவள் மட்டுமா? அன்று ஒரு மாணவன் கூட வரவில்லை. பாவம் பரத். அன்று சனிக்கிழமை என்று அவனுக்கு நினைவில்லை.

 

உண்மையை சற்று தாமதமாக உணர்ந்த பரத், என்ன செய்வதென்று அறியாது நின்றான். தன் கையில் கசங்கிய காகிதம் போல் தன் எண்ணங்களும் கசங்கி விட்டனவே என்ற ஏமாற்றம், கோபமாய் உருவெடுத்தது. சோமு என்ற சோ… மன்னிக்கவும், கோமாளியின் பேச்சைக் கேட்டு ஏமாந்தோம் என்ற வெறுப்பு அவனை வாட்டியது, இனிமேலாவது சுயமாக சிந்தித்து, எட்டிய வாய்ப்பை நழுவ விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவுடன் வீடு திரும்பினான்.

 

அவனின் கனவுகளின் மீதம்… ஏக்கம் மட்டுமே.

Venkatesh

In Memories, Venkatesh shares an amusing anecdote on the trials of a boy who experiences his first crush.

Advertisements