மாணவிகள்

Ashwinii & Habibah

கதாபாத்திரங்கள் – மதுமிதா, கவிதா, வான்மதி (மாணவிகள்)

இடம் – வகுப்பறை (பள்ளி)

 

கவி – ‘இதோ பாரு, வான்மதியோடு நான் உட்காரலை! அவளை எனக்கு பிடிக்காதுனு உனக்கு தான் தெரியும்ல? நீ வந்து உட்காரு. அந்த பையை தூக்கி அவ வர வழியில வை, அதைப் பார்த்தாவது அவள் இங்கு வரக்கூடாது.’

 

மது – ‘அவளை பத்தி தான் உனக்கு தெரியுமே? ஏன் நீ இதெல்லாம் பெருசா எடுத்துக்குற? இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டுடு!’

 

கவி – ‘அய்யோ டேப் ரெகோடர் வாயை தொறந்தா மூடாதுடி புரியாம பேசாத!’

 

மது – ‘உனக்கு ஒன்னு தெரியுமா?’

 

கவி – ‘என்ன?’

 

மது – ‘நம்மள முதுகுல எப்படா குத்தலாம்னு காத்திருக்காங்களே, நம்மகூட படிக்கிற சில பேர்…அவங்கலுக்கு இவளே எவ்வளவு மேல் தெரியுமா? நம்மகிட்ட ஒரு விஷயம் பிடிக்கலைனா அதை நேரடியா சொல்லிடுவா. மத்தவங்கள மாதிரி கிடையாது. இதெல்லாம் ஏன் உன் கண்ணுக்கு தெரியமாட்டேங்குது?’

 

கவி – ‘சொல்லுவேமா..ஏன் சொல்லமாட்டே? உன்னோட நல்லதுக்காக சொன்னேன் இல்லையா..என்னை சொல்லனும்…’

 

மது – ‘சரி, சரி, அமைதியா இரு. இப்போ நம்ம வகுப்புல எல்லாரும் அவங்களுக்கு தனிப்பட்ட முறையில முன்னோடியா இருக்கறவங்களை பத்திப் பேசப் போராங்க.’

 

(முதல் மாணவி பேசுகிறாள்)

 

கவி – ‘ஆமாம் ஆமாம், நாங்களும் தான் காந்தியை பத்தி பேசுவோம். இதெல்லாம் ஒரு பேச்சா? இவ காந்தியை பத்தி பேசுறாளே இவ அவரை மாதிரி ஒரு நாளைக்காவது பொறுமையா இருப்பாளா?’

 

மது – ‘அவ காந்தியை மாதிரி இருப்பாளாங்குறது முக்கியமில்ல. நீ இருப்பியா? வான்மதி பேசுறதை தவிர வேற யாருக்கும் தொல்லை கொடுக்குறதில்ல. அதை கேட்க உனக்கு பொறுமை இருக்கா? ’

 

கவி – ‘அம்மா பெரியவங்களே! உனக்கு இருக்குற பொறுமை எனக்கில்ல! இனிமேல் நான் வாயை தொறந்து பேசவும் இல்ல.’

 

(தொடர்ந்து சில மாணவர்கள் தங்களுடைய முன்னோடிகளைப் பற்றி பேசினார்கள். அனைவரும் பேசியதும் இறுதியாக வந்தாள் வான்மதி.)

 

கவி – ‘சும்மாவே காலி டப்பால கோலி போட்ட மாதிரி வளவளனு பேசுவா…இப்ப என்ன பேசபோறாளோ..அதையும் உக்காந்து கேக்கனுமே…’

மது – ‘கவிதா..வளவளனு பேசுறவங்க்கிட்ட தான் அதிகமான சோகம் இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன்…அதனால கொஞ்சம் பொறுமையா கேளு…’

 

வான்மதி – ‘எனக்கு முன்மாதிரி…என்னுடைய தாயார்…’

 

கவி – ‘இதைத்தானே நானும் சொன்னேன்? வகுப்பில் இருந்த பாதி பேருக்கு மேல் இந்த பதிலைத்தானே சொன்னாங்க, இவ என்ன புதுசா சொல்லிடப்போறா?’

 

வான்மதி – ‘என்னுடைய தாயார் லுகீமியா புற்றுநோயால் அவரது பதினெட்டாவது வயதிலேயே இறந்து போய்விடுவார்கள் என்று மருத்துவர்கள் எப்பொழுதோ கைவிட்டுவிட்டனர். ஆனால், இன்று வரை அவர் எப்படியோ மனத்திடத்துடன் தன் உடல் நலத்தை பேணிக்காத்து உயிருடன் இருக்கிறார். இருப்பினும் அவருடைய உயிருக்காக அவர் படும் போராட்டம் தன்னை சுற்றி இருப்பவர்களை பாதித்துவிடக் கூடாது என்பதற்காக எப்பொழுதும் சந்தோஷமாகவே இருப்பார். ஏனெனில், எதோ ஒரு காரணத்தினால் என்னுடைய தந்தை அவரை விவாகரத்து செய்துவிட்டார். எனக்கு தெரிந்த நாள் முதல் என் தாயுடன் மட்டுமே வாழ்கிறேன். நோயால் அத்தனை அவதிப்பட்டாலும், அவர் எனக்கு ஒரு தாயாராக இருந்து செய்யவேண்டியவற்றை என்றைக்குமே புறக்கணித்தில்லை. அவர் எனக்குக் கற்றுத் தந்த முக்கிய பாடம் ஒன்றே ஒன்று தான்; வாழ்க்கையில் எத்தருணத்தில் நாம் எவரையும் இழக்க நேரலாம். அப்போது, தைரியமாக நின்று போராடவும் வாழ்க்கையை எதிர்கொள்ளவும் நாம் கற்றிருக்கவேண்டும்.’

 

(இடையில் யாரோ அழும் சத்தம் கேட்டு மது திரும்பி பார்க்கிறாள்)

 

மது – ‘கவி, என்ன ஆச்சு? அழுறியா? நீயா?’

 

கவி – ‘இது வரைக்கும் அவளுடைய வளவள பேச்சை தான் கேட்டிருக்கேன்..ஒருவேளை இதெல்லாம் மறைக்கத்தான் அவ இவ்வளவு பேசுறாளா…’

 

மது – ‘நான் சொன்னேன்ல..இப்போவாது உனக்கு புரியுதா?

 

(வகுப்பு முடிந்து…)

 

கவி – ‘வான்மதி…நீ எப்படி இவ்வளவு மனதைரியத்துடன் இருக்குறனு தெரியல..’

 

வான்மதி – ‘கவிதா? நீயா என்கிட்ட பேசுறது? அதெல்லாம் பழகிடுச்சு. ஆரம்பத்துல என்னோட அம்மாவோட நிலையை என்னாலும் ஏத்துக்க முடியல. அப்பறம், அநாதைகளாக நிறைய பேரு வாழுறாங்க என்பதையும் அவங்களை காட்டிலும் என் நிலமை மேல் என்பதையும் காலப்போக்குல உணர்ந்துகிட்டேன்…சரி கவிதா, அடுத்த வகுப்புக்கு நேரமாச்சு நான் கிளம்புறேன்!’

 

(வான்மதி சென்ற பிறகு)

 

கவி – ‘மது..எதுவுமே நடக்காத மாதிரி எவ்வளவு சர்வசாதாரணமா போறா…வான்மதிக்கு இருக்குற மனப்பக்குவம் எல்லாருக்கும் சீக்கிரமா வராது…இந்த நிலமைல இவ்வளவு தூரம் படிக்கிறதே பெரிய விஷயம்…நான் அவளுக்கு என்னால முடிஞ்ச உதவியை செய்யனும்..’

மது – ‘இவ்வளவு தூரம் நீ அவளை புரிஞ்சுகிட்டதே சந்தோஷம் தான் கவிதா. நானும் உன்கூட சேர்ந்து அவளுக்கு உதவுறேன்.’

 

(இருவரும் அடுத்த வகுப்பறையை நோக்கி செல்கிறார்கள்.)

Advertisements