மன்னிப்போம், மறப்போம்

Annalectmi

கதாமாந்தர்கள்: மாலதி, தேவி. அவர்கள் இருவரும் ஆசிரியர்கள்.

இடம்: ஆசிரியர் அறை, பள்ளிக்கூடம்

நேரம்: நண்பகல்

 

மாலதி: தேவி!

 

தேவி: என்ன மாலதி?

 

மாலதி: நம் பள்ளிக்கு ஓர் ஆங்கில ஆசிரியை தேவை என தலைமையாசிரியர் கூறினாரே. ஞாபகம் இருக்கிறதா?

 

தேவி: ஆமாம், ஞாபகம் இருக்கிறது. அதற்கென்ன இப்போது?

 

மாலதி: அப்படி யாரையாவது உனக்கு தெரியுமா?

 

தேவி: அது வந்து…

 

மாலதி: என்ன வந்து, போய் என்று இழுக்கிறாய்?

 

தேவி: நேற்று வெள்ளிக்கிழமை அல்லவா? நான் வழக்கம் போல கோயிலுக்குச் சென்றிருந்தேன்.

 

மாலதி: அது தான் தெரிந்த கதையாயிற்றே! பிறகு?

 

தேவி: அங்கு, ஒரு பெண்ணிடம் பேசும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.

 

மாலதி: அப்படியா?

 

தேவி: ஆமாம். அந்தப் பெண்ணின் குடும்பம் கஷ்ட நிலையில் இருப்பதாகக் கூறினாள். அதோடு மட்டும் இல்லாமல், அவள் தனியார் பள்ளியில் புதுமுக வகுப்பு படிப்பதாகவும், தனக்கு தற்காலிக ஆசிரியை வேலை கிடைத்தால் படிப்புக்கு உதவியாக இருக்கும் எனக் கூறினாள்.

 

மாலதி: அதனாலென்ன? தற்போது நம் பள்ளியில் தான் ஓர் ஆசிரியை தேவைப்படுகிறாரே. அப்பெண்ணிடம் அவ்வேளையைப் பற்றி கூற வேண்டியது தானே.

 

தேவி: கூறலாம் என்று நினைப்பதற்குள், ஒரு விஷயத்தைப் பற்றி என் தோழியின் மூலம் கேள்விப்பட்டேன்.

 

மாலதி: என்ன விஷயம் கேள்விப்பட்டாய் தேவி?

 

தேவி: அவரைப் பற்றிக் கேள்விப்பட்டதும் எனக்கு சற்று குழப்பமாக இருக்கிறது.

 

மாலதி: புதிர் போடாமல் சற்று புரியும் படி கூறு.

 

தேவி: நானும் இதே போல் ஒரு முறை அப்பெண்ணின் தந்தையிடம் உதவி கேட்டேன் மாலதி.

 

மாலதி: அவர் உதவி செய்தாரா இல்லையா?

 

தேவி: இல்லை. அதன் பிறகு, எப்படியோ கஷ்டப்பட்டு, இறைவன் அருளால் இந்த வேலை கிடைத்தது.

 

மாலதி: ஓ… அப்படியா விஷயம்?

 

தேவி: ஆமாம். மாலதி, அந்தச் சம்பவம் என் மனதில் பசு மரத்தாணி போல, ஆறாத வடுவாய் பதிந்து விட்டது.

 

மாலதி: அது தான் நீ தயங்கியதற்கு காரணமா?

 

தேவி: ஆமாம் மாலதி.

 

மாலதி: தேவி, உன் புண்பட்ட மனதிற்கு நிம்மதியும் ஆறுதலும் பெற ஒரு வழி சொல்கிறேன். கேட்பாயா?

 

தேவி: சொல் மாலதி, பிடித்திருந்தால் செய்கிறேன். என்ன, சரிதானே?

 

மாலதி: சரி. இப்போது நாம் ஆசிரியர்கள். மாணவர்களுக்கு நற்பண்புகளைக் கற்றுக் கொடுக்கும் நிலையில் இருக்கிறோம்.

 

தேவி: அதற்க்காக…

 

மாலதி: நாமும் முன்பு படித்திருக்கிறோம் அல்லவா? திருவள்ளுவர் என்ன கூறியிருக்கிறார்? “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்”

 

தேவி: நீ என்ன சொல்ல வருகிறாய்?

 

மாலதி: சுய கௌரவத்தைப் பற்றி எண்ணுகிறாயா தேவி?

 

தேவி: அது வந்து…

 

மாலதி: நீ எல்லாவற்றையும் மறந்து, மன்னித்துவிடு. அப்பெண்ணுக்கு உதவி செய். இல்லையென்றால், உனக்கும் அப்பெண்ணின் தந்தைக்கும் என்ன வேறுபாடு உண்டு? நன்றாக யோசித்துப் பார்.

 

தேவி: நீ கூறுவது சரிதான். நான் உடனே அப்பெண்ணை தொடர்பு கொள்கிறேன். என் அறிவுக்கண்ணை திறந்து வைத்ததற்கு மிக்க நன்றி.

 

மாலதி: சரி, நேரமாகிறது. நாளை காலையில் சந்திப்போம்.

Advertisements