சிங்கப்பூர் பொன்விழாவிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடம்

 

பொன்னும் மணியும் விளையா நாட்டில் இன்று உலகமே மூக்கின் மேல் விரலை வைக்கும் அளவுக்குக் கைத்தொழிலால் முன்னேறிய நாடு என்றால், அது நம் சிங்காரத் திருநாடாகத் தான் இருக்க முடியும். எத்தனையோ நாடுகள் பொன்விழா கொண்டாடினாலும், அது நம் நாட்டு பொன்விழாவிற்குச் சமமாகாது.

 

சிறு மீன்பிடி கிராமமாக, மீன் பிடித்து வியாபாரம் செய்தது வாழ்க்கை நடத்தி வந்தோம். ஆனால் இன்றோ, நம் நாட்டின் வணிகத் துறையால், மற்ற நாடுகள் நம் நாட்டிற்கு வர்த்தகம் செய்ய ஈர்க்கப்படுகின்றன. இதிலிருந்து, வாழ்க்கையில் கஷ்டப்பட்டு உழைத்தால் வானம் உயர வளர்ச்சி பெறலாம் என்று கற்றுக்கொள்கிறோம்.

 

சுத்தம் சுகம் தரும் என்னும் பொன்மொழிக்கேற்ப தூய்மையான நாடு எங்கிருந்தாலும், மக்கள் கடல் போல் அலை அலையாய் வண்டு குடியேறுவார்கள். இதை நிரூபித்து காட்ட, நம் சிங்கைத் திருநாட்டில் வெளிநாட்டினர் குடியுரிமைப் பெற்று வாழ விரும்புகிறார்கள். இதற்கு, நம் நாட்டிலுள்ள சுற்றுப்புற சுகாதாரம் ஒரு முக்கிய காரணமாகும். குறுகிய காலத்தில் நம் நாடு ஒரு பசுமையான, எழில்மிக்க சோலையாக காட்சி புரிந்து வெளிநாட்டினரை ஈர்ப்பது இப்பொன் விழாவிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் இன்னொரு பாடமாகும்.

 

வந்தாரை வாழ வைக்கும் நாடு எங்கள் சிங்கைத் திருநாடு. உழைப்பு என்ற மூலதனம் இருந்தால், இங்கு நல்ல வேலை வாய்ப்பும் ஊதியமும் கிடைக்கும் என்பதில் ஐயம் இல்லை. நோய் நொடி இல்லாமல் வாழ, மருத்துவ வசதிகள் இருபத்து நான்கு மணி நேரமும் கிடைக்கும். போர் பூசல் இல்லாமல், கொலை கொள்ளை போன்ற குற்றங்கள் குறைந்த நிலையில் உள்ளது. இதுபோன்ற சிறப்பு அம்சங்களுடன் ஒரு அமைதியான, தரமான வாழ்க்கைச் சூழல் இங்கே அமைந்துள்ளது. மொத்தத்தில், ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என வான் புகழ் வள்ளுவர் கனவு கண்டாரோ, அவ்வாறே நம் சிங்கப்பூர் செயலாற்றி வருகிறது. சிறு நாடாக இருந்தாலும், இவ்வாறு அசுர வேகத்தில் வளர்ச்சி பெறுவது சாத்தியமே என்பதை இப்பொன் விழாவின் மூலம் நாம் கற்றுக்கொள்கிறோம்.

 

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு என்ற திடமான நம்பிக்கையில், நான்கின மக்களும் ஒரு தாய் பிள்ளைகள் போல் பழகி இன நல்லிணக்கத்தை மேற்கொள்கின்றனர். எம்மதமும் சம்மதம் என்ற பேதமற்ற கொள்கையை கடைப்பிடிப்பதால், ஒற்றுமையும் பொறுமையும் நம் இரு கண்களாக பாவித்து வருகிறோம். பல வருடங்களுக்கு முன் நடந்த இனக் கலவரங்களால் நடந்த சேதத்தை நினைவுக் கூர்ந்து, அவை மீண்டும் நடைப்பெறாத படி பள்ளிப் பருவம் முதல் இன நல்லிணக்க நாளை கொண்டாடும் அளவிற்கு நம் அரசு திட்டம் வகுத்து, நான்கு இன மக்களை ஒன்றுபட்ட மக்களாக உருவாக்கியுள்ளது. நம் இன நல்லிணக்கத்தைப் பற்றி எண்ணி நாம் பெருமிதம் கொள்ள வேண்டும்.

 

இப்பொன் விழா கொண்டாடும் வேளையில், நம் தேசத் தந்தையான திரு லீ குவான் யூ அவர்களின் மறைவு, நம் தேசத்தை துயரத்தில் ஆழ்த்தியது. அல்லும் பகலுமாக உழைத்து புதியதோர் நாட்டை உருவாக்கினார். இன்று நாம் சுகமாகவும், நலமாகவும் வாழ தன் இறுதி மூச்சு வரை நாட்டுக்காக சேவை செய்து உயிர் நீத்தார். திரு லீ குவான் யூ போன்றோரின் தேச பக்தி, நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. அவரின் மறைவை எண்ணி வேதனைக் கொள்ளாமல், அவரைப் போன்றே நாட்டுக்கு சேவையாற்றி, நம் வருங்கால சந்ததியினரின் வளர்ச்சிக்கு ஆணிவேராக இருக்கவேண்டும் என்ற முக்கியப் பாடத்தை இப்பொன் விழாவின் போது நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

Annaletchmi

In What I learned Through the Nation’s Golden Jubilee, Annaletchmi shares our nation’s achievements, from its origins as a fishing village to its development as a thriving metropolis.