சிங்கப்பூரின் பொன்விழா கொண்டாட்டங்களிலிருந்து நாம் கற்றுகொள்ளும் பாடம்.

 

அண்மை காலத்தில் சமூக வலைத்தளம் ஒன்றில் வெளிவந்த ஒரு செய்தியை படிக்க நேர்ந்தது. சிங்கப்பூரின் பொன்விழாவையொட்டிய விடுமுறை நாட்களில் பல சிங்கப்பூரர்கள் நம் பொன்விழாவை கொண்டாடுவதற்கு பதிலாக மற்ற ஊர்களுக்கு பிரயாணம் மேற்கொள்ள திட்டமிடுகிறார்கள். ஆதலால், அந்த நான்கு நாட்களுக்கு சிங்கப்பூரர்கள் யாரும் இந்நாட்டை விட்டு வெளியேற முடியாது என்று அரசாங்கமே உத்தரவு இட்டதாக ஒரு செய்தி வந்திருந்தது.

 

முதலில் அதை படித்தவுடன் திகைத்து நின்றேன். ‘மேற்கூறப்பட்ட செய்திகள் அனைத்தும் கற்பனையே’ என்ற பின்குறிப்பைப் படித்தவுடன் தான் என்னுடைய அதிர்ச்சியிலிருந்து மீண்டு வந்தேன். ஏனெனில், சிங்கப்பூரின் பொன்விழா என்பது நான்கு நாட்களில் மட்டுமே கொண்டாடப்பட்டு பின் எளிதில் மறக்கப்பட்டுவிடக்கூடிய ஒன்றாக இருக்கவேண்டும் என்பது நமது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல. 2015-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே, நம் நாட்டின் வரலாற்றின் ஒரு மைல்கல்லான பொன்விழா ஆண்டை மிக விமிரிசையாக கொண்டாட சிங்கை அரசாங்கம் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றது என்று கூறினால் அது மிகையாகாது. சிங்கை சமுதாயத்தில் வாழும் அனைவரும் ஒன்றாக கூடி இத்தகைய நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும் வண்ணமும் இந்த நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளன. நம் நாட்டின் பொன்விழாவிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடங்கள் பற்பல. அவற்றில் ஒருசிலவற்றை ஆராய்ந்து படைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

 

முதலாவதாக, இந்நாட்டின் ஆரம்பக்கட்ட வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய முன்னோடி தலைமுறையினரை கௌரவிக்கும் வண்ணம் பற்பல நடவடிக்கைகளையும் திட்டங்களையும் நமது அரசாங்கம் செயல்படுத்தியுள்ளது. அவற்றுள், நம் தமிழ் சமுகத்திற்கு மிகப் பொருத்தமான இரண்டு நிகழ்ச்சிகள் உள்ளன. அவை, முரசு எனும் தமிழ் நாடகமும், ‘சிங்கை தமிழ் நாடகத்துறையின் கடந்த ஐம்பது ஆண்டுகள்’ எனும் காணொளி தொகுப்புமே ஆகும். ரவீந்தரன் நாடகக் குழுவின் தயாரிப்பில் இடம்பெற்ற முரசு எனும் நாடகம் தமிழ் முரசு நாளிதழைத் தோற்றுவித்த தமிழவேள் திரு கோ.சாரங்கபாணி அவர்களின் வரலாற்றை நினைவுகூறுகின்றது. மேலும், சிங்கையின் தமிழ் நாடகத்துறையைப் பற்றிய காணொளித் தொகுப்பு, அத்துறையில் முத்திரை பதித்த கலைஞர்களின் அனுபவங்களைத் தொகுத்து ஆவணப்படுத்துகின்றது. இத்தகைய நடவடிக்கைகள், நம் முன்னோடிகளை கௌரவப்படுத்தி, அவர்களின் வரலாற்றை ஆவணப்படுத்துவதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை; வருங்கால தலைமுறையினருக்கு இவர்களைப் பற்றிய செய்திகளையும் இவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடங்களையும் கொண்டு சேர்க்கின்றது என்பதில் ஐயமும் இல்லை.

 

அதுமட்டுமல்ல, கடந்த ஐம்பது ஆண்டுகளில் நம் நாடு கடந்த வந்த பாதையை நினைவுகூறும் வண்ணமும் பலதரப்பட்ட நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இத்தகைய நடவடிக்கைகள் நம் நாட்டின் நாளைய தலைவர்களான இளையர்களை கருத்தில் கொண்டு, நம் வரலாற்றைப் பற்றிய விழிப்புணர்வை அவர்களிடையே அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதற்கு ஒரு சிறந்த உதாரணம், ‘Becoming Bishan’ என்ற மரபுடைமைத் திட்டம். இராப்பிள்ஸ் தொடக்கக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் குழு, பிஷான் குடியிருப்புப் பேட்டையின் ஐம்பது ஆண்டு வளர்ச்சியில், அவ்விடம் எந்தவித மாற்றங்களை அடைந்துள்ளது, அப்பொழுது இருந்த அந்த இடத்திற்கும் இப்பொழுது இருக்கும் நவீன பிஷானுக்கும் இடையே என்ன வேறுபாடுகள் உள்ளன என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வத்தின் முதற்படியாக தொடங்கியது இந்த திட்டம். ஓராண்டின் உழைப்பிற்கு பிறகு, இந்த திட்டத்தின் வாயிலாக சேகரித்த தகவல்கள் அனைத்தையும் ஒன்றுதிரட்டி, பீஷான் பொதுநூலகத்தில் ஒரு காட்சியகமாகவே இம்மாணவர்கள் படைத்துவிட்டார்கள். இதுபோன்ற நடவடிக்கைகள், ஒரு நாட்டின் வளர்ச்சியில் மட்டுமல்ல, அந்நாட்டின் வரலாற்றை பற்றி அறிந்து கொள்வதில் அடுத்த தலைமுறையினருக்கு உள்ள மிக முக்கிய பங்கை சுட்டிக்காட்டுகிறது அல்லவா?

 

மேலும், சிங்கப்பூரின் தனித்தன்மையையும் அடையாளத்தையும் வலியுறுத்தி நிலைநாட்டும் வண்ணம் நமது பொன்விழா ஆண்டையொட்டி பல நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. உலகமயமாகுதலினால் வெளிநாட்டினர் பலர் சிங்கப்பூருக்கு வேலை நிமித்தமாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ வருகை புரிகின்றனர். பல்லின சமுதாயத்தில் இவர்களை ஒரு அங்கமாக இணைத்துக்கொள்ளும் அதே தருணத்தில், நமது அடையாளத்தையும் கட்டிக்காக்க வேண்டும் என்பதற்காக ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கைகளில் “SG Heart Map” எனும் நடவடிக்கையும், தேசிய பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “The Photo Thing” எனும் நடவடிக்கையும் அடங்கும். நமது சமுதாயத்தில் வாழும் வெவ்வேறு அங்கத்தினரிடையே ஒற்றுமையை வலுப்படுத்துவதோடு, சிங்கப்பூரைப் பற்றி நாம் கொண்டுள்ள பசுமையான நினைவுகளையும் மலரச் செய்கின்றது; இந்நினைவுகளை அவசரமான இவ்வுலகில், காலப்போக்கில் அழிந்துவிடாமல் போற்றி பாதுகாத்தல் அவசியம் என்பதையும் வலியுறுத்துகின்றது.

 

மாற்றம் ஒன்றுதான் மாறாதது. அதுமட்டுமல்ல, ஐம்பது ஆண்டுகளிலேயே நமது நாடு பரிணாம வளர்ச்சியையும் பிரம்கிக்கத்தக்க மாற்றங்களையும் அடைந்துள்ளது. இந்த மாற்றங்களுக்கு இடையிலும், நம் அடையாளத்தையும், தனித்துவத்தையும், வரலாற்றையும், நினைவுகளையும் போற்றி பாதுகாக்க வேண்டியது நமது கடமையே ஆகும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.

 

Reliving the memories of home and strengthening the sense of homeland is the theme behind Ashwinii’s work, What I learned Through the Nation’s Golden Jubilee.

Reliving the memories of home and strengthening the sense of homeland is the theme behind Ashwinii’s work, What I learned Through the Nation’s Golden Jubilee.

Advertisements